காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி : சாமி

திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அதை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை. சமூக ஊடகங்களில் தனது பெயருக்கு அடுத்து காங்கிரஸ் தலைவர் என்றிருந்ததை நீக்கிவிட்டார்.

இந்த சூழ்நிலையில், ராகுலைத் தொடர்ந்து பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக வருவாரா அல்லது அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவே மாட்டாரா என்ற குழப்பம் கட்சியில் ஒரு மாதமாக நீடித்து வருகிறது.

இதை பா.ஜ.க. கிண்டலடித்து வருவதுடன், காங்கிரசை இன்னும் பலவீனமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளனர். கர்நாடகாவில் 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்து விட்டு, பா.ஜ.க.வில் சேரக் காத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதாவது, ‘‘கோவா மற்றும் காஷ்மீர் சம்பவங்களை கவனித்த பின்பு, பா.ஜ.க. மட்டுமே ஒரே கட்சியாக விடப்பட்டால், நாட்டின் ஜனநாயகம் மிகவும் பலவீனமாகி விடும் என்று கருதுகிறேன். இத்தாலிய சந்ததியை காங்கிரசை விட்டு வெளியேறச் சொல்லுங்கள். மம்தா பானர்ஜி, திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கலாம். தேசியவாத காங்கிரசும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மோடியின் 2வது ஆட்சியில் நிதியமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த சுப்பிரமணிய சாமிக்கு அமைச்சரவையில் இடமே கொடுக்கவில்லை. வேறு பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த சாமி, சமீப காலமாக மெல்ல,மெல்ல பா.ஜ.க.வை சீண்டி வருகிறார்.

பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு; கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்?
More News >>