கிரண்பேடி அதிகாரம் குறைப்பு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகாரம் குறைக்கப்பட்ட வழக்கில், மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணை நிலை கவர்னராக உள்ள கிரண்பேடி, அரசு அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதும், நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுமாக செயல்பட்டு வந்தார். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார். இந்த மோதலுக்கு இடையே, அரசு நிர்வாகத்தில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், முதலமைச்சரின் அதிகார வரம்பைக் கடந்து, யூனியன் பிரதேச கவர்னர்கள் செயல்பட முடியாது என்றும் கூறி, கவர்னரின் அதிகாரத்தை குறைத்து உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதன்பின், அரசு நிர்வாகத்தில் தனக்கு உரிய அதிகாரத்தை குறைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, முன்னர் இருந்த அதிகாரம் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கிரண் பேடியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மேல்முறையீடு வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், கவர்னரின் அதிகாரத்தைக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு கவர்னர் கிரண்பேடிக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரண்பேடிக்கு முத்தரசன் கண்டனம்..! தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள் என்பதா?