தெலுங்குதேசம் கட்சியை கரைக்கிறது பா.ஜ.க எம்.எல்.சி. கட்சி தாவல்

தெலுங்குதேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் வேலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்ெகாண்டு வருகிறது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த அன்னம் சதீஷ் பிரபாகர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தது மேற்கு வங்க முதல்வர் மம்்தா பானர்ஜியும், ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவும்தான். தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 எம்.பி.க்களை கைப்பற்றிய பாஜக, பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியில் இருந்த அதிருப்தியாளர்களை இழுக்கத் தொடங்கியது.

அதே போல், ஆந்திராவில் ஆட்சியை இழந்து விட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியையும் கரைக்கத் தொடங்கியது பாஜக! சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் அவரது கட்சியில் இருந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களில் 4 பேரை பா.ஜ.க இழுத்தது. அடுத்த கட்டமாக, முன்னாள் ஏலூர் எம்.எல்.ஏ. அம்பிகா கிருஷ்ணா உள்பட பல தெலுங்குதேசம் கட்சிப் பிரமுகர்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரான அன்னம் சதீஷ் பிரபாகர் நேற்று சபாநாயகரைச் சந்தித்து தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்குதேசம் தோற்றதற்கு சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ்தான் முக்கிய காரணம் என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலையில் அவர் டெல்லி சென்று, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது பல நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் விரைவில் பா.ஜ.க.வில் சேருவார்கள்’’ என்றார். எனவே, தெலுங்குதேசம் கட்சியை கூடிய மட்டும் கரைக்கும் பணியில் பா.ஜ.க. மும்முரமாக உள்ளது.

மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, கோவா என்று வரிசையாக ‘களப்பணி’ ஆற்றும் பா.ஜ.க. எப்போது தமிழகத்திற்குள் வந்து ஆட்டத்தைத் துவக்கப் போகிறதோ?

குப்பம் தொகுதியில் வாக்காளர்களிடம் உருகிய சந்திரபாபு நாயுடு
More News >>