நீட் தேர்வு விவகாரம் : ldquoவடிகட்டிய பொய்யைrdquo தயக்கமில்லாமல் அதிமுக கூறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதலமைச்சர் பழனிச்சாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி தான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது.

ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு- இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை “பா.ஜ.க.வுடன் கூட்டணி” வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான். அது மட்டுமல்ல- நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும்தான்!

ஏன் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுகதான். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு- பா.ஜ.க.வின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிச்சாமிதான். ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சரும், அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும் தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான்” என்கிறார். ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார். ஆனால் தலைவர் கருணாநிதி அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையிலும், 2006-ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும், பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதி நிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்.

அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். அந்த சட்டத்திற்குப் பெயர், “Tamilnadu Professional Education Institution Admission Act 2006”!. கல்வி “Concurrent List”ல் இருப்பதால் – இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3.3.2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் தி.மு.க. ஆட்சியில்தான். பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் கழக ஆட்சி இருந்த போதுதான்.

இந்த அடிப்படைத் தகவல்கள் கூட சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவருக்குத் தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறக் காரணமாக இருந்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை முதலமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இனிமேலாவது “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கிரண்பேடிக்கு முத்தரசன் கண்டனம்..! தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள் என்பதா?
More News >>