மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் கடந்த பிப்.15-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்யாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. திண்டுக்கல் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் மனோகரன் வழக்கு தொடர்ந்தார்.

தம் மீது முகாந்திரம் ஏதும் இன்றி அரசியல் காழ்ப்புணர்வுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் முறையீடு செய்திருந்தார்.மேலும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் மனுவில் கோரியிருந்தார்.

இதே போன்று, கரூர் பொதுக் கூட்டம் மற்றும் ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக டிடிவி தினகரன் மீது அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரனின் மனுக்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் மனுக்களையும் தனித்தனியே விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஸ்டாலின், தினகரன் மனுக்களுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News >>