கோவா, கர்நாடகாவை முடித்த பின் ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக
கர்நாடகா, கோவாவைப் போல் அடுத்து ராஜஸ்தானிலும் நடக்கும் என்று ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகவின் எம்.எல்.ஏ.வுமான குலாப்சந்த் கட்டாரியா கூறியுள்ளார். எனவே, கோவா, கர்நாடகாவில் காங்கிரஸ் கதையை முடித்து வி்ட்டு, ராஜஸ்தானிலும் பா.ஜ.க அந்த வேலையில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அதனால், அசோக் கெலாட்டை கட்சிப் பொறுப்புக்கு அழைத்து கொள்ள தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டதால் கட்சித் தலைமையே உறுதியில்லாமல் உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவைப் போல் ராஜஸ்தானிலும் ஆளும் காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் விலகலாம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான குலாப்சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கர்நாடகா, கோவாவைப் போல் அடுத்து ராஜஸ்தானிலும் நடக்கலாம்.
அதற்கு பாஜக பொறுப்பல்ல. அசோக் கெலாட் பட்ஜெட் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, தான் முதலமைச்சர் பதவியை விட்டு விலக மாட்டேன் என்று கூறியுள்ளார். தேவையில்லாமல் ஏன் அவர் அப்படி கூறுகிறார்? காரணம், காங்கிரஸ் கட்சிக்குள் கடும் சண்டை நடக்கிறது. எனவே, ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜ.க. பொறுப்பல்ல’’ என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 112 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 72 எம்எல்ஏக்களும் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை. எனவே, ராஜஸ்தானிலும் காங்கிரசில் இருந்து 12 எம்எல்ஏக்கள் வரை இழுத்தால்தான் ஆட்சியை கவிழ்க்க முடியும்.