ரயில் தண்ணீர் போதவில்லை சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை வராமல் தடுக்க எந்த ஆட்சிக்காலத்திலும் வெற்றிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. கிருஷ்ணா கால்வாய், புதிய வீராணம் குடிநீர் என்று எத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை தற்காலிகமாக தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதாகவே உள்ளன.
தலைநகரில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் நெருக்கம் எத்தனை சதவீதம் அதிகரித்து வருகிறது?, எத்தனை நீர்நிலைகள் காணாமல் போய் வருகின்றன?, எத்தனை டி.எம்.சி. மழை நீர் வீணாக கடலுக்கு போகிறது? புதிய ஏரி, குளங்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் என்ன? நில ஆர்ஜிதம் செய்வதில் இழுபறிக்கு தீர்வு காண்பது எப்படி? என்று வரிசையாக கேள்விகளை எழுதி, ஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆழ்ந்து சிந்தித்திருந்தால் தண்ணீர் பற்றாக்குறை போயிருக்கும்.
இப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழாவரம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மொத்தமே 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 2 ரயில் வேகன்களில் மொத்தம் 4 டிரிப் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. ஒரு டிரிப்புக்கு 2.5 மில்லியன் லிட்டர் என்று மொத்தமே 10 மில்லியன் லிட்டர்தான் கொண்டு வரப்படுகிறது. அதாவது ஒரு கோடி லிட்டர்தான் வருகிறது. இதற்கே, ரயில்களுக்கு தினமும் 32 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துகிறது தமிழக அரசு.
தினமும் ரயில்களில் வருவது 10 மில்லியன் லிட்டர்தான். ஆனால், சென்னை மக்களுக்கு தினமும் 525 மில்லியன் லிட்டர், அதாவது 53 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால், சென்னை குடிநீர் வாரியம், வீடுகளுக்கு குழாய்களில் குடிநீர் சப்ளை செய்வதில் 40 சதவீதம் அளவுக்கு நிறுத்தி விட்டது. சின்டெக்ஸ் தொட்டிகளில் மட்டும் நீர் நிரப்பி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் லாரிகள் புக்கிங் செய்வதென்றால், அதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று வாரியம் கூறுகிறது. ஆனால், ஆன்லைனில் பதிய முடியவில்லை என்கின்றனர் மக்கள்.
இதனால், தனியார் லாரி தண்ணீரின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி ஒன்றுக்கு விலை 2 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது இது 5 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விட்டதாகவும், அதற்கே தண்ணீர் லாரி கிடைப்பதில்லை என்றும் மக்கள் புலம்புகி்னறனர். காவிரியில் தண்ணீர் போதிய அளவு வராவிட்டால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது. அந்த சூழலில், ஜோலார்பேட்டையில் இருந்தும் காவிரி கூட்டுக்குடிநீரை ரயிலில் கொண்டு வருவதும் தற்காலிகமான தீர்வாகவே அமையும். அதனால், மழை வராவிட்டால் சென்னையில் அடுத்த மாதம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை.
கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி