மம்தா ஆட்சியை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி: 107 எம்எல்ஏக்கள் கட்சித் தாவ தயார்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. திரிணாமுல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 107 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக உள்ளதாக முகுல்ராய் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 302 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றார். வழக்கமாக, இவ்வளவு பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை கண்டுகொள்ளாமல் ஆட்சியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால், பாஜகவோ அப்படியில்லை. தேர்தலுக்கு முன்பு எப்படி ஒவ்வொரு கட்சியும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுப்பார்களோ அந்த வேலையை இப்போதும் செய்கிறது பாஜக.

அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தேர்தலின் போது கடுமையாக விமர்சித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு என்று குறிவைத்து பாஜக தனது ஆட்டத்தை நடத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த மறுநாளே பா.ஜ.க.வினர் தங்கள் வேலையை துவக்கினர். அங்கு இது வரை திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சுப்ரான்ஷூ ராய், துஷார் காந்தி உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ‘‘இது முதல் கட்டம்தான். தேர்தலைப் போல் ஏழு கட்டங்களில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்கும்’’ என்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பா.ஜ.க. தேசிய செயலாளர் கைலாஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து அந்த கட்சிக்கு வலு சேர்த்து வரும் மூத்த தலைவர் முகுல்ராய் நேற்று அதிரடியாக ஒரு தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

மம்தாவின் செயல்பாடு அவரது கட்சியினருக்கு பிடிக்கவில்லை. மாநில அளவிலும் சரி, மாவட்ட அளவிலும் சரி. கட்சி நிர்வாகிகள் பலரும் பாஜகவுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. திரிணாமுல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மொத்தம் 107 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள். அனைவருமே பாஜக மாநில தலைமையுடன் தொடர்பில் உள்ளார்கள். விரைவில் அவர்கள் பாஜகவில் சேருவார்கள்.

இவ்வாறு முகுல்ராய் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 295. இதில் திரிணாமுல் கட்சியின் பலம் 207 ஆக இருந்தது. தற்போது 200 ஆக குறைந்திருக்கிறது. காங்கிரஸ் 43, மார்க்சிஸ்ட் 23, பாஜக 12 என்ற பலத்தில் இருக்கிறார்கள். எனவே, திரிணாமுல் கட்சியில் இருந்து 50 எம்எல்ஏக்கள் கட்சி தாவினாலே ஆட்சி கவிழ்ந்து விடும். அப்படி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு, 6 மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கும், கட்சி மாறி வந்த எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் சீட் தருவதற்கும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சந்திரபாபு நாயுடுவைப் போல் மம்தா பானர்ஜிக்கும் இனி கெட்ட நேரம்தான்?

More News >>