அட்டார்... என்னா பெளலிங் ஆக்சன்...! பும்ராவை நெகிழச் செய்த மூதாட்டி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து நடைபெற்று இன்று முடிவடைய உள்ள உலக கோப்பை தொடர் கடந்த 45 நாட்களாக அனைவரையும் நேரலையில் கட்டிப் போடச் செய்துவிட்டது எனலாம். சிறுவர் முதல் வயது முதிர்ந்தோரையும் உலக கோப்பை கிரிக்கெட் அன்றாடம் பேச வைத்துவிட்டது எனலாம். இந்தியா தான் கோப்பை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், நியூசிலாந்துடனான அரையிறுதி போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியில் இருந்து இன்னமும் மீள முடியாமல் உள்ளனர். தோல்விக்கான காரணங்களையும் பலரும் பலவிதமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த தோல்வி தந்த சோகத்திலிருந்து இந்திய அணியின் வீரர்களும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதும் உண்மைதான். இப்படிப் பட்ட சோகத்தில் இருந்து வீரர்கள் மீள, பலரும் பல்வேறு விதமாக தங்கள் ஆறுதல்களைக் கூறி வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர்.
அந்த வகையில், இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும் அதே ஸ்டைலில் ரசிகர் ஒருவரின் தாயாரான வயதான மூதாட்டி ஒருவர், டிவியைப் பார்த்தபடி பந்து வீசும் காட்சியுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. வயதான அந்த மூதாட்டி சைசில் கொஞ்சம் பெரிய பிளாஸ்டிக் பந்தை இரு கைகளாலும் பிடித்தபடி, ஒரு சின்ன ஓட்டம் ஓடி வீச முயலும் அசத்தலான காட்சி அனைவரையும் கவர்ந்து விட்டது.
இதனைப் பார்த்த பும் ராவும் கூட அசந்து விட்டார் போலும். This made my day என்று படு உற்சாகமாக பதிலுக்கு பதிவிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
2016-ல் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் காலடி எடுத்து வைத்த பும்ரா, வேகப்பந்து வீச்சில் படுவேகமாக முன்னேறி தற்போது நம்பர்.1 பந்து வீச்சாளராகத் திகழ்கிறார். உலக கோப்பை போட்டியிலும் 9 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். அவருடைய பந்து வீச்சே தனி ஸ்டைல்தான். இரு கைகளிலும் பந்தை பிடித்தபடி குறைந்த தூரமே ஓடி வந்து அசத்தலாக பந்து வீசி, எதிரிகளை வீழ்த்தும் அவருடைய ஸ்டைல் இளம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அமோக பிரபலம் என்பது தெரிந்த சங்கதி தான். இப்போது வயதான மூதாட்டியும் அவருடைய ஸ்டைலில் மயங்கி விட்டது தான் கூடுதல் சங்கதி.
இந்த உலக கோப்பை தொடரில் தோற்று வெளியேறிய போதும் கூட தோல்வியின் சோகத்தை மறைக்க, உடன் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் நன்றி தெரித்து டுவிட்டரில் பதிவிட்டு நெகிழச் செய்திருந்தார் பும்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.