உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி , இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக ரன் குவிக்க திணறி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில், கோப்பையை வெல்ல இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதுவரை கோப்பையை குசிக்காத இவ்விரு அணிகளும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் களமிறங்கினர். மார்ட்டின் குப்டில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோலஸ் உடன் இணைந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் அவுட்ஆனார். அரைசதம் அடித்த ஹென்றி நிகோலஸ் 55 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க, அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர் (15), ஜேம்ஸ் நீஷம் (19), கிரான்ட்ஹோம் (16), டாம் லாதம் (47) மேட் ஹென்றி(4 ) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது. மிட்செல் சான்ட்னர் 5 ரன்னுடனும், டிரென்ட் போல்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இங்கிலாந்து அணியில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் 242 ரன்கள் எடுத்தால் உலக கோப்பைபையை முதன் முதலில் ருசிக்கலாம் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.