காங்.to தமாகா to அதிமுக to அமமுக to திமுக..! வேலூர் ஞானசேகரன் இப்போ திமுகவில் ஐக்கியம்

வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளுக்கு மாறி கடைசியாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்து வேலூர் ஞானசேகரன், இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

1990 களில் காங்கிரசில் மிக முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர் வேலூர் ஞானசேகரன். சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். நான்கு முறை வேலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஞானசேகரன் சட்டசபை விவாதங்களிலும் சிறப்பாக செயல்பட்டவர். முதல்வராக இருந்த கருணாநிதி, இவருடைய சட்டசபை செயல்பாடுகளை பலமுறை பாராட்டியிருக்கிறார்.

மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது அக்கட்சியிலும் முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். மீண்டும் காங்கிரசில் தமாகா இணைந்த போதும், அதன் பின் வாசன் தமாகாவை ஆரம்பித்த போதும் அவருடனேயே பயணித்தார். சில வருடங்களுக்கு முன் திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்த வேலூர் ஞானசேகரன், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். சமீப காலமாக அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுக என வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், ஞானசேகரன், அமமுகவில் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் இன்று ஞானசேகரன், தனது ஆதரவாளர்கள் பலருடன் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு திடீரென வந்தார். அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதாக அறிவித்து, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை
More News >>