ஜெயலலிதா படத்தை அவசர கதியில் திறந்தது ஏன்? - திறப்பு விழாவில் பங்கேற்காத தினகரன் விளக்கம்
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் அவசர கதியில் திறந்ததற்கு ஆட்சி போய்விடும் என்ற அச்சம் தான் காரணம் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், "ஜெயலலிதா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை இந்தியாவின் 3 வது பெரிய கட்சியாக வெற்றிபெற செய்தவர். அவரது உருவப்படத்தை சட்டசபையில் அவசர கதியில் திறந்ததற்கு ஆட்சி போய்விடும் என்ற அச்சம் தான் காரணம்.
தேசிய தலைவரான ஜெயலலிதா படத்தை திறக்க தேசிய தலைவர்களை அழைத்து விழா நடத்தி இருக்க வேண்டும்; ஆனால் மறைந்த மாநகராட்சி மேயர் படத்தை திறப்பதைப் போல் ஜெயலலிதா படத்தை திறந்து வைத்துள்ளனர்.
ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். வருங்காலத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அரசியலில் வேலை இருக்காது. தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்பது அவருக்கும் தெரியும். இருந்தாலும் கட்சி நடத்தவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசிவருகிறார்.
எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் மூலம் ஆட்சியை பிடிப்போம். தீபா, மாதவன் இருவருமே சீட்டிங் பார்டி” என்று தெரிவித்துள்ளார்.