குமாரசாமி அரசு இன்றே நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அமளி - நாளை வரை ஒத்திவைப்பு

கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.

கர்நாடக அரசியலில், கொள்கையாவது கத்திரிக்காயாவது என்ற ரீதியில் பதவி மோகம், பண ஆசையால் பித்துப் பிடித்து அலைகின்றனர் தற்போதைய எம்எல்ஏக்களில் பலர். அதுவும் தற்போது நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இந்தக் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்று விட்டது என்றே கூறலாம். பதவி கேட்டு அடம் பிடித்து போர்க்கொடி தூக்குவதும் காரியம் முடிந்தவுடன் சமாதானம் ஆவது என்பது தான் கடந்த 13 மாத கால ஆட்சியில் நடந்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம், நூலிழை மெஜாரிட்டியில் ஆட்சி நடைபெறுவது தான்.224 பேர் கொண்ட சட்டப்பேரவையில் மெஜாரிட்டிக்குத் தேவை 113 பேர் .தற்போதைய நிலையில் காங்கிரஸ் 79, மஜத 37 என 116 என்ற நிலையில் 2 சுயேட்சைகள், 1 பகுஜன் சமாஜ் ஆதரவுடன் 119 பேர் பலத்துடன் ஆட்சியில் இருந்தது குமாரசாமி அரசு . பாஜகவோ 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சியை கவிழ்த்து விட முடியாதா என கங்கணம் கட்டிக் கொண்டு கண் கொத்திப் பாம்பாக காத்துக் கிடக்கிறது. இதனால் பதவி, பணம் ஆசை காட்டி தூண்டில் போட்டு வந்தார் பாஜகவின் எடியூரப்பா.

தற்போது அந்தத் தூண்டிலில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி விட பாஜகவுக்கு கொண்டாட்டமாகி விட்டது. சுயேட்சைகள் இருவரையும் தங்கள் பக்கம் சாய்த்து விட்டது. இதனால் தற்போதைய நிலையில் குமாரசாமி அரசுக்கான பலம் கிட்டத்தட்ட 100 என்ற அளவுக்கு குறைந்து விட்டதால் ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக தரப்பிலும் மெஜாரிட்டி இழந்து விட்ட குமாரசாமி உடனே பதவி விலக வேண்டும். பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதமும் கொடுத்து விட்டார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும், அதற்கான நாள் குறிக்குமாறும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். சனி, ஞாயிறுகளில் அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறியிருந்தார்.

இந்த இரு நாட்களில் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியமாகினர். ஆனால் ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், மேலும் 6 பேர் மனு செய்து விட்டனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது பாஜகவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் இன்று சட்டப் பேரவை தொடங்கும் முன்னர், பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் தலைமையில் சென்ற ஒரு குழுவினர் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்தனர். அப்போது, குமாரசாமி அரசு உடனே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும். பேரவையில் வேறு அதுவல்கள் எதையும் நடத்தக் கூடாது என கடிதம் கொடுத்தனர்.

இதனை பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவை கூடியது. அப்போது பாஜக எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பு நடத்தக் கோரி கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையை நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைத்த சபாநாயகர், நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் குமாரசாமி அரசு தப்பிக்குமா ? பிழைக்குமா? என்பதற்கு மேலும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வரும், சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழுத் தலைவருமான சித்தராமய்யா, வரும் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்து மேலும் 2 நாட்களுக்கு விவகாரத்தை தள்ளிப் போட்டுள்ளார்.

குமாரசாமி அரசு தப்புமா? பாஜகவிலும் கோஷ்டி பூசல்..! எடியூரப்பா முதல்வர் ஆக எதிர்ப்பு
More News >>