தாய் கையால் சாப்பிடாத தலைவர் (ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாள்)

'காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு விருதுநகருக்கு நானும் காமராஜருடன் விருதுநகருக்குச் சென்றிருந்தேன். சிவகாமி அம்மையார், சாப்பிட்டுவிட்டு செல்லும்படி மகன் காமராஜிடம் வலியுறுத்தினார்.

ஆனால், மதுரையில் அவசர வேலை இருப்பதாகவும், அங்கு சாப்பிட்டுக் கொள்வதாகவும் கூறி காமராஜர் கிளம்பி விட்டார். சில நாள்கள் கழித்து, அன்னை சிவகாமி இயற்கை எய்தினார். அப்போது காமராஜர் என்னிடம், முப்பது வருடங்களாக தாம் வீட்டில் சாப்பிட்டதில்லை என்பதை நினைவுகூர்ந்தார்" என்று பழ.நெடுமாறன் ஓரிடத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தாய் கையால் சாப்பிடாத அந்த தனயன், பள்ளி பிள்ளைகளுக்கு மதிய உணவு தந்து கல்வியையும் சேர்த்தே ஊட்டினார்.

இளமை காலம்

அப்போது விருதுபட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி காமராஜ் பிறந்தார். அவரது பெற்றோர் குமாரசாமி - சிவகாமி ஆவர். சிறுவயதில் அவர் குலதெய்வத்தின் பெயரால் காமாட்சி என்றே அழைக்கப்பட்டார். பின்னர் பெற்றோர் அன்பின் காரணமாக அவரை காமாட்சி ராஜா என்று அழைத்தனர். பின்னாளில் அது காமராஜ் என்று மருவியதாக கூறுகின்றனர். காமராஜுக்கு நாகம்மை என்ற தங்கை இருந்தார்.

ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த காமராஜ், உள்ளூர் திண்ணை பள்ளியிலும் ஸ்ரீஜத் ஏனாதி நாயனார் வித்யாசாலையிலும் பின்னர் நாடார் சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட ஷத்திரிய வித்யா சாலா உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். 'பிடி அரிசி பள்ளி' என்று அழைக்கப்பட்ட அப்பள்ளியில் 1888ம் ஆண்டிலிருந்தே கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

காமராஜின் ஆறாவது வயதில் அவரது தந்தை குமாரசாமி உடல்நலம் குறைந்து இயற்கை எய்தினார். பன்னிரண்டு வயது வரை பள்ளிக்குச் சென்ற காமராஜ், பின்னர் தம் தாய் மாமா கருப்பையாவின் ஜவுளி கடையை கவனிக்க ஆரம்பித்தார்.

அரசியல் பயணம்

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த காமராஜர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும், கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1954 ஏப்ரல் 13ம் தேதி முதல் 1963 அக்டோபர் 2ம் தேதி வரை பதவி வகித்தார்.

கல்வி புரட்சி

காமராஜர் முதல்வர் பதவிக்கு வந்தபோது, 15,000 கிராமங்களில் 6,000 பள்ளிகளே இருந்தன. தமிழ்நாட்டில் 50 விழுக்காடு சிறுவரே கல்வி பயின்று வந்தனர். ஓராசிரியர் பள்ளியை காமராஜர் அறிமுகம் செய்தார். இரண்டு பள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவினை குறைத்தார். பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக பயிற்றுவிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. 1957ம் ஆண்டு 15,800 தொடக்கப் பள்ளிகளே இருந்தன. அவை 1962ம் ஆண்டு 29,000 பள்ளிகளாக எண்ணிக்கையில் உயர்ந்தன.

1952ம் ஆண்டு தமிழ்நாட்டில் 814 உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. 1962ம் ஆண்டு அவை 1,995 பள்ளிகளாக உயர்ந்தன. காமராஜ் ஆட்சியின் தொடக்க காலத்தில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமியர் எண்ணிக்கை 19 லட்சமாக இருந்தது. அவர் ஆட்சியின்போது 36 லட்சமாக அந்த எண்ணிக்கை உயர்ந்தது.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏறத்தாழ 30 விழுக்காடு கல்விக்கு ஒதுக்கப்பட்டது.

1966ம் ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி ஹுயூபர்ட் ஹம்ப்ரி "சுதந்திர உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்" என்று காமராஜரை குறித்து கூறியுள்ளார். 1969ம் ஆண்டு காமராஜர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காமராஜர் இவ்வுலக வாழ்வை நீத்தார். 2006ம் ஆண்டு முதல் தமிழக அரசு, காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்து வருகிறது.

More News >>