கர்நாடகாவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்பது சந்தேகம்

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய விவகாரம், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து விட்டு மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் முறைப்படி வழங்கப்படவில்லை எனக் கூறி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்து விட்டார். இதனால் 16 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும் நாளை வரை இந்த எம்எல்ஏக்களின் மீதோ, அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியான பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரத் தயார் என முதல்வர் குமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் புதன்கிழமை வரை சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்ததுடன், வரும் வியாழக்கிழமை (18ந் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இதற்கிடையே மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டார்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அவர்கள் தங்கியுள்ள ரெனாய் சன்ஸ் சொகுசு ஹோட்டலிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள அறைகளுக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும், யாரையும் சந்திக்கவும் கூடாது என கட்டுப்பாடு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் எம்எல்ஏக்களை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி அடைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், கர்நாடக அரசியலில் இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப்போகிறதோ? தெரியவில்லை.

More News >>