தனி விமானத்தில் தப்ப முயன்ற காங்.எம்எல்ஏ... மோசடி வழக்கில் கைது செய்த போலீஸ் ..! பெங்களூருவில் பரபரப்பு
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 13 எம்எல்ஏக்களும், மஜத எம்எல்ஏக்கள் 3 பேரும் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் குமாரசாமி அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை மறுதினம் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. எனவே வாக்கெடுப்பிற்கு முன்னதாக அதிருப்தியாளர்களை சரிக்கட்டி விட ஆளும் தரப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜகவோ, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து மும்பையில் உள்ள நட்சத்திரம் ஹோட்டலில் பத்திரமாக தங்க வைத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ரோஷன் பெய்க் என்பவரும் ஆட்சிக்கு எதிராக போக்கு காட்டி வருகிறார்.நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் ஒன்றில் செல்ல முயன்ற போது அவரை சிறப்பு புலனாய்வு போலீசார் திடீரென கைது செய்தனர். ரோசன் பெய்க் கைது செய்யப்பட்டது குறித்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஐஎம்ஏ ஜுவல்லர்ஸ் நிதி நிறுவன மோசடியில் ரோசன் பெய்க் மீதும் புகார்கள் உள்ளது. இந்த நிதி நிறுவன மோசடி குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக ரோசன் பெய்க்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைவதற்காக பெங்களுருவில் இருந்து தனி விமானத்தில் மும்பைக்கு ரோசன் பெய்க் பறக்க உள்ள தகவல் அறிந்து சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோசன் பெய்க்கை தனி விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததே எடியூரப்பாவின் ஆட்கள் தான் என்றும், ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அதிருப்தி எம்எல்ஏக்களை ஊக்கப்படுத்துவதே பாஜக தான் என்று முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். விமான நிலையத்தில், ரோசன் பெய்க் உடன் எடியூரப்பாவின் தனி உதவியாளர் சந்தோஷ் மற்றும் பாஜக எம்எல்ஏ யோகேஷ்வர் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர் என்று முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் பாஜக தரப்பிலோ இதனை மறுத்துள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க அதிகார துஷ்பிரயோகத்தில் குமாரசாமி ஈடுபடுகிறார். போலீசை ஏவி அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுகிறார். ரோசன் பெய்க் ஆஜராக 19-ந் தேதி அவகாசம் கேட்டிருக்கும் நிலையில் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கர்நாடக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமி இறுதி முயற்சி; அதிருப்தியாளர்களுடன் பேச்சு