தமிழுக்காக குரல் கொடுத்து அதிமுக எம்.பி.க்கள் அமளி ராஜ்யசபா இருமுறை ஒத்திவைப்பு
தபால் துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இது வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழகத்தில் பங்கேற்போர் தமிழ் மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்வில் தமிழ் மொழியில் எழுத முடியாது, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழ் மொழியை புறக்கணித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வை நடத்தலாம்... ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.மேலும் தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவைத்தலைவர், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடுவின் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடிய போதும் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
அஞ்சல் தேர்வில் தமிழ் நீக்கம்; சட்டசபையில் காரசார விவாதம்