ஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும்: திமுக
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார்.
தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசினார். அவர் பேசுகையில், ‘‘தற்போது கடைகளில் விற்கப்படும் பாக்கெட் இனிப்பு பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி, சாப்பிடுகிறார்கள். அவற்றில் என்ன மூலப்பொருட்கள் இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. அவற்றில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன என்பதே தெரிவதில்லை. இதனால், சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன’’ என்றார்.
இதை கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கை படம் போல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை இடம் பெற செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.
தொடர்ந்து பூங்கோதை பேசுகையில், ‘‘நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால், தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் பயற்சி மையங்கள், அதிக பணம் சம்பாதிப்பதற்காகவே இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் இந்த அரசு அனுமதித்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும்’’ என்றார்.
உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, ‘‘பழைய பழமொழி எல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்துதான், ஜெயலலிதா அன்றைக்கே அம்மிக்கல்லுக்கு பதிலாக அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், தமிழகத்தில் என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சிதான் நடக்கும்’’ என்றார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் பெஞ்சைத் தட்டி வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘‘ஆடிக்காற்றும் அடிக்கப் போவதுமில்லை, அம்மிக் கல்லும் பறக்கப் போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப் போவதில்லை’’ என கூறினார்.
அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?