அவைக்கு வராத அமைச்சர்கள் கடும் கோபத்தில் பிரதமர் மோடி

‘நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்கள் யார், யார்? இன்றே பட்டியல் கொடுங்கள்...’’ என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் முதல் முறை ஆட்சியின் போது அவரே நாடாளுமன்றத்திற்கு பல நாட்கள் வந்ததில்லை. காரணம், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் சென்று விட்டதுதான். அதனால், அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் கூட பல நாட்கள் ஆப்சென்ட் ஆவதுண்டு. ஆனால், இந்த முறை பிரதமர் மோடி பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை, பெண் உறுப்பினர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின உறுப்பினர்கள் என்று பல குழுக்களாக பிரித்து அவர்களை காலை உணவுக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மேலும், இம்மாதம் 2ம் தேதியன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மோடி பேசும் போது, ‘‘ஆளும்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே கண்டிப்பாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும். அவையை எந்த நேரத்திலும் புறக்கணிக்கக் கூடாது. அவைக்கு வராதவர்கள் மீது கட்சி கடுமையாக நடவடிக்கை எடுக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், அதன்பின்பும் மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக எம்.பி.க்கள் பலரும் அவைக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் சிறிது நேரம் மட்டும் இருந்து விட்டு வெளியேறி விடுகிறார்களாம். கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூட அமைச்சர்கள் இருப்பதில்லை என்று எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்து பிரதமருக்கு புகாரும் சென்றிருக்கிறது.

இ்ந்நிலையில், இன்று(ஜூலை 16) காலை நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நான் பல முறை எச்சரித்தும் அமைச்சர்கள் சிலர் சரியாக அவைக்கு வருவதில்லை என்று தகவல் வருகிறது.

நான் உறுப்பினர்களின் வருகைப் பதிவேடு, பேச்சுகள், குறுக்கீடுகள் என்று எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். எந்தெந்த அமைச்சர்கள் அவைக்கு எத்தனை நாள் வரவில்லை என்ற பட்டியலை இன்று மாலையே என்னிடம் கொடுங்கள். அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கோபமாக பேசியுள்ளார். அதனால், இம்முறை சரியாக செயல்படாத அமைச்சர்கள், அமைச்சரவையில் இருந்து கழட்டி விடவும் பிரதமர் தயங்க மாட்டார் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

போராடிய இந்திய அணிக்கு மோடி, ராகுல் பாராட்டு
More News >>