புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்து தம்பி சூர்யாவுக்கு என் ஆதரவு..! கமல் உதவிக்கரம்
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்பது போல் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்று தெரியவில்லை.எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என, அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. சூர்யாவின் இந்தக் கருத்துக்கு, ஆளும் கட்சிகளின் தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதனால் இவ்விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிர்ப்பாக மற்றொரு தரப்பிலும் விமர்சனங்கள் எழுவதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது: ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ,மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற 'வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு'' என கமல் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!