கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், கடைசியாக கடந்த ஜூனில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு காவிரியில் ஜூ்ன் மாதம் வரை திறந்து விட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. கடந்த மே மாதத்திற்குரிய 9.19 டிஎம்.சி தண்ணீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டு, இவ்வளவு நாட்களாகியும் கர்நாடக அரசு இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் புகார் கூறியது.

இதனால், மேட்டூர் அணையை திறக்க முடியாமல் குறுவை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 40.43 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதால், உடனடியாக தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு அப்போது கூறியது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, கர்நாடக அரசு, அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தற்போது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர்(கேஆர்எஸ்) அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டது.

'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்'..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!
More News >>