மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி சிறையிலடைப்பு பாகிஸ்தான் திடீர் நடவடிக்கை
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைகளின் போது, பாகிஸ்தானில் செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லஸ்கர் தீவிரவாதிகளின் தலைவர் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவது தெரிய வரவே, அவரை வழக்கு விசாரணைக்கு ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டு கொண்டது.
ஆனால், மும்பை குண்டுவெடிப்பில் ஹபீசுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரம் போதவில்லை என்று பாகிஸ்தான் சமாளித்து வந்தது. எனினும், கடந்த 2017ம் ஆண்டு ஹபீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், 11 மாதங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டடனர். ஹபீஸ் மீது 23 பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்த போதும், சுதந்திரமாக பேரணிகளை நடத்தி, இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.
இந்நிலையில், இந்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாகவும், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் தற்போது பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் அரசு சற்று தயக்கம் காட்டி வருகிறது. மேலும்,மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இது வரை தண்டிக்கப்படாதது பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலையைத் தந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படுமா? சட்டசபையில் பாஜக தகவல்