நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு குமாரசாமி அரசின் கதி என்னவாகும்?

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று 16 பேரும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதனால் குமாரசாமி அரசு தப்பிப் பிழைப்பது சந்தேகம் தான் என்ற நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள். இதில் காங்கிரஸ் (79), மதச்சார்பற்ற ஜனதா தளம் (37), இரு சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆதரவு என மொத்தம் 119 பேர் பலத்துடன் குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. பாஜகவின் பலம் 105 ஆக இருந்தது.

இப்போது, காங்கிரசின் 13 எம்எல்ஏக்களும், மஜதவின் 3 பேரும் அதிருப்தியாளர்களாக மாறி, ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துவிட்டனர். சுயேட்சைகள் 2 பேரும் ஆதரவை வாபஸ் பெற்று விட்டனர். இதனால் 16 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டாலோ, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலோ, பேரவையில் எம்எல்ஏக்களின் பலம் 208 ஆகிவிடும்.மெஜாரிட்டிக்கு தேவை 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் குமாரசாமி அரசின் பலம் இப்போது 101 என்றாகிவிட்டது. பாஜகவுக்கோ 105 எம்எல்ஏக்களுடன் 2 சுயேட்சைகளும் ஆதரவாக இருப்பதால் 107 பேரின் ஆதரவு கிட்டும். இதனால் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதனால் அடுத்து, பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தற்போது அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியே பாஜக அவர்களை தக்க வைத்துள்ளது. 16 பேரும் ராஜினாமா செய்தாலும், பாஜக அரசு அமைந்தால் அவர்கள் அமைச்சர்களாவதற்கும் எந்த இடைஞ்சலும் இப்போது இல்லை. அமைச்சராக பதவியேற்று விட்டு, 6 மாதத்தில் அவர்கள் தங்கள் தொகுதிகளில் போட்டியிட்டு மீண்டும் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை எதிர்கொள்வதா? அல்லது இன்றே ராஜினாமா செய்து விடலாமா? என்ற யோசனையில் முதல்வர் குமாரசாமி ஆழ்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஐனதாதளத் தலைவர்களுடன் குமாரசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதனால், கர்நாடக அரசியலில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் - நாளை தீர்ப்பு
More News >>