அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம் காஞ்சியில் கடும் நெரிசல்
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் வராதவர்களும் இன்று சேர்ந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்பு காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தினமும் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பலர் கூட்டநெரிசலைப் பார்த்து விட்டு பாதியிலும் திரும்பி விடுகின்றனர். 17-வது நாளான நேற்று(ஜூலை 17) அத்திவரதர் மாம்பழ நிறப் பட்டு உடுத்தி, செண்பகப்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
எனினும், நேற்று காலை 11 மணியளவில் அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இன்னொரு புறம், சந்திரகிரகணம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் நேற்று குறைந்தது.
இந்நிலையில், நேற்று வராத பக்தர்களும் சேர்ந்து இன்று வரத் தொடங்கியதால், அதிகாலை முதல் காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இன்று காலை 9 மணியளவில் காஞ்சிபுரத்திற்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்மப்பேட்டை - வாலஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் 15 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. காஞ்சிபுரத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து, போக்குவரத்தை சரி செய்ய கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே வாகனங்களை ஒழுங்கு செய்து போக்குவரத்தை சரி செய்தனர். எனினும், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
இதற்கிடைேய, 18வது நாளான இன்று(ஜூலை18) அத்திவரதர் கத்தரிப்பூ பட்டு உடுத்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து கொண்டிருக்கிறார்.
போலீசுடன் அர்ச்சகர்கள் மோதல்; அத்திவரதர் தரிசனம் பாதிப்பு