தமிழகத்தில் அதிகாலை நடந்த இரு வேறு விபத்துகள் 16 பேர் பலியான சோகம்
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே இன்று அதிகாலையில் நடந்த இரு வேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் நான்கு வழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இவ்விபத்தில், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற வேனில் பயணித்த 9 பேரும், ஆம்னி பஸ் டிரைவரும் உயிரிழந்தனர். மினி வேனில் சென்றவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்கள் பயணித்த வேன் ஒன்று இன்று அதிகாலை 1.30 மணியளவில் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த அருணாசல பாண்டியன் - கவுசல்யா தம்பதியர் தங்களது 3 மாத ஆண் குழந்தை அனீஸ் பாண்டிக்கு நேர்த்திக்கடன் செலுத்த உறவினர்கள் 18 பேர் சகிதம் திருச்செந்தூருக்கு வேனில் சென்றனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் கால்வாய் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் சின்னாபின்னமானது. இதில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று அதிகாலையில் நடந்த இந்த இரு விபத்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி ; விடிய விடிய நடந்த மீட்புப் பணி