ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரிய நளினி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். வழக்கமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 15 ஆண்டுகளுக்கு பின்பு விடுதலையாகி விடுவார்கள்.
இதனால், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இது தொடர்பாக, உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தொடரப்பட்டு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடைசியாக, அந்த 7 பேர் விடுதலை தொடர்பான மனுக்களை கவர்னர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.
இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி பல மாதங்களாகியும் அவர் அதில் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில், நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் முடிவு அறிவிக்கவில்லை. எனவே, கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட முடியாது, எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததே அல்ல என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் பிரியங்கா காந்தி வெளியிட்ட திருமண படம்