உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழில் வெளியானது
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதன்முதலாக தமிழிலும் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பரிந்துரை அடிப்படையிலும், வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மொழிகளில் கூட தீர்ப்புகள் வெளியிடப்பட்டு, தமிழில் வெளியிடாததற்கு தமிழக அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. செம்மொழியான தமிழிலும் தீர்ப்புகளை வெளியிட வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் திமுக சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழில் இன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. சரவணபவன் ராஜகோபால் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழில் வெளியாகியுள்ளது. இனிமேல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம், சாதாரண மக்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எளிதில் படித்து அறிந்து கொள்ளலாம்.