ஒரே கலக்கமாக இருக்குதாங்க? - இவற்றை செய்து பாருங்க
வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன.
'இருந்து என்ன பிரயோஜனம்?'
'வாழ்ந்து என்ன செய்யப்போறேன்?'
'விடிந்தால் என்ன நடக்கும்?'
இதுபோன்ற கேள்விகள் மனதை துளைக்கின்றனவா?
எந்த பிரச்னையும் ஒரே நாளில் தீர்ந்துவிடப்போவதில்லை; அதுபோன்று தீர்வில்லாத பிரச்னையும் எதுவுமில்லை. திகைப்பு, கலக்கம், பயம் இவை ஒருங்கே சேர்ந்து உங்களை வாட்டுகின்றனவா? அவற்றை மேற்கொள்ள சில எளிய வழிகள் உள்ளன.
பிரச்னைகளை பட்டியலிடுங்கள்:
எதை நினைத்தால் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்பதை வரிசையாக எழுதுங்கள். அப்போதுதான் உண்மையில் எவற்றை கண்டு நீங்கள் கலங்குகிறீர்கள் என்பது தெரிய வரும். இந்த விஷயம்தான் மன சமாதானத்தை, சாந்தியை கெடுக்கிறது என்று புரிந்துகொண்டால் அவற்றை கையாளுவது எளிதாகும்.
தூங்கி இளைப்பாறுங்கள்:
மனக்கலக்கத்திற்கு எதிராக போராடுவதற்கான தெம்பை தருவது உறக்கம்தான். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கைக்குச் சென்று விடுங்கள். எக்காரணம் கொண்டும் உறக்கத்தை தவிர்க்கக்கூடாது. மனக்குமுறலால் உறக்கம் தடைபடலாம். ஆனால், கூடிய மட்டும் மனதை சாந்தப்படுத்தி தூங்குங்கள். நன்றாக தூங்கி எழுந்தால், பிரச்னைகளை தீர்க்குமளவு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
ஆழ்ந்து மூச்சுவிடுங்கள்:
மனம் கலங்கும் வேளைகளில், நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து உள்வாங்கி பின் மெதுவாக விடுங்கள். மூச்சு உள்ளே சென்று திரும்புவதை கவனியுங்கள். ஆழ்ந்து மூச்சுவிடும்போது இதய துடிப்பின் வேகம் நிதானமாகும். பதற்றப்பட தேவையில்லை என்ற சமிக்ஞை மூளைக்குக் கிடைக்கும். மனம் அமைதியாகும்.
தசைகளை தளர்த்துங்கள்:
மனஅழுத்தத்தோடு இருக்கும்போது பற்களை கடித்துக்கொண்டிருப்போம்; வாய் இறுக மூடியிருக்கும்; தசைகள் முறுக்கேறிப்போய் இருக்கும். அதுபோன்ற வேளைகளில் உங்கள் உடலின்மீது கவனம் செலுத்துங்கள்; ஒவ்வொரு உறுப்பையும் நோக்கி கவனத்தை திருப்புங்கள். தசைகளை தளர்த்துவதற்கான பயிற்சிகளை செய்யுங்கள்.
மது வேண்டாம்; காஃபிக்கும் நோ:
மனக்கலக்கத்தோடு இருக்கின்ற சமயங்களில் மதுவோ, காஃபியோ அருந்த வேண்டாம். ஏற்கனவே மனம் சோர்ந்து போயிருக்கின்ற வேளையில், இவை நிலைமையை மோசமாக்கக்கூடும்.
பரபரப்பான வாழ்க்கைமுறையால் இதுபோன்ற முயற்சிகளுக்குப் பலன் தெரிய சற்று காலதாமதமாகலாம். பொறுமையாக இவற்றை கடைபிடியுங்கள்; மனக்கலக்கத்தை ஜெயிக்கலாம்!