கர்நாடக சட்டசபையில் கடும் அமளி வாக்கெடுப்பின்றி ஒத்திவைப்பு...! பாஜக இரவு முழுவதும் தர்ணா
கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று அறிவித்த நிலையில் காலை 11 மணிக்கு சட்டப் பேரவை கூட்டம் தொடங்கியது.
இன்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில் 204 பேர் மட்டுமே பங்கேற்றனர். 20 பேர் பங்கேற்கவில்லை. இதில் காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருடன் சேர்ந்து நீ மந்த் படேல் என்ற காங்கிரஸ் எம்எல்ஏவும் புறக்கணித்தார். அரசுக்கு ஆதரவளித்து வந்த பகுஜன் கட்சி எம்எல்ஏ மகேஷ், 2 சுயேச்சைகள் மற்றும் பாஜகவின் ஒரு எம்எல்ஏ என மொத்தம் 20 பேர் சட்டப்பேரவையில் இன்று பங்கேற்கவில்லை.
இதனால் 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 100 பேரும், பாஜக தரப்பில் 104 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் குமாரசாமி உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் இப்போது நிலவும் குளறுபடிகளுக்கு எல்லாம் பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டினார். என்னுடைய அரசு நீடிக்குமா? இல்லையா? என்பது பிரச்னையில்லை. ஆனால் சபாநாயகரின் அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளது. முதலில் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா, கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும். கொறடா உத்தரவின் முக்கியத்துவத்தை, சீர்குலைப்பதை ஏற்க முடியாது. கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரான எனக்கு, எனது அதிகாரத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது. உடனடியாக சட்டமன்ற அலுவல்களை ஒத்தி வைத்து கொறடா உத்தரவு பற்றி விவாதிக்க வேண்டும் என நீண்ட நேரம் பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவும், பாஜக எம்எல்ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பானது. அப்போது குறுக்கிட்ட எடியூரப்பா, திட்டமிட்டே வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் கடத்த முயற்சிக்கிறீர்கள். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார். ஆனாலும் சித்தராமய்யா நீண்ட நேரம் பேசினார். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சித்தராமய்யாவுக்கு ஆதரவாக டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் பேசினர்.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது காலதாமதமானது.காங்கிரஸ் உறுப்பினர்கள், கொறடா உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில் 1.45 மணியளவில் மதிய உணவுக்காக சட்டப்பேரவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் 3 மணிக்கு சட்டப் பேரவை கூடிய போது, அமைச்சர் சிவக்குமார் புதிய பிரச்னையை கிளப்பினார்.காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக கடத்திச் சென்றுள்ளது.
நேற்று இரவு 8 மணி வரை எங்களுடன் இருந்த எம்எல்ஏ ஸ்ரீ மந்த் பட்டேல் மும்பைக்கு கடத்தப்பட்டுள்ளார். வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவினரால் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என சில ஆதாரங்களையும் காண்பித்தார். மேலும் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியுமா?முடியாதா? என்பது பற்றியும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் அமளி ஏற்பட்டது.
இதனால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநில அரசின் அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கப் போவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையே பாஜகவின் நிர்வாகிகள் சிலர் மாநில ஆளுநரைச் சந்தித்து வாக்கெடுப்பை இன்றே நடத்த உத்தரவிடுமாறு முறையிட்டனர். ஆளுநரும் இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் மீண்டும் 4.30 மணிக்கு சபை கூடிய போதும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பாஜகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் எம்எல்ஏ வின் புகைப்படங்களை காட்டி பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடக் கூடாது என்றும் எதிர்ப்பு க் குரல் கொடுத்ததால் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மீண்டும் 10 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் மாலை 6 மணிக்கு சபை கூடியது. இரவு 12 மணியானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தினார். ஆனால் கடத்தப்பட்ட எம்எல்ஏ ஸ்ரீமந்த் படேல். சபைக்கு திரும்பும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்க முடியாது என காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் கண்டிப்பு காட்டினர். இதனால் ஆளும் தரப்பு மற்றும் பாஜக எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அமளியானது. இதைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை சட்டப்பேரவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.
இதனால் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை சட்டப்பேரவையை விட்டு நகர மாட்டோம் என்று கூறி இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால், கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.