காய்ந்து கிடந்த குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. இனியாவது சீசன் களைகட்டுமா?
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர்.
குற்றாலத்தில் வழக்கமாக மே இறுதி வாரத்தில் சீசன் அறிகுறி தென்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் அருவிகளில் சுமாராக தண்ணீர் எட்டிப் பார்க்கும். இதனால் ஜூன் மத்தியில் இருந்து ஆகஸ்டு முடிய சீசன் களைகட்டும். இந்தக் கால கட்டத்தில் சாரல், மழை, அருவி நீரில் நனைந்து உடலை குளிர்விக்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் குற்றாலத்திற்கு படையெடுப்பது வழக்கம். 2 , 3 நாட்கள் தங்கி, விதவிதமாக சமைத்து உண்டு, ஆசை தீர அருவிகளில் கும்மாளக் குளியல் போடுவதற்கென்றே பெரும் குற்றால ரசிகர் பட்டாளமே உண்டு.
ஆடி மாதத்தில் வியாபாரம் சரியாக நடக்காது என்பதால் தமிழகத்தில் உள்ள வியாபாரிகள் பலரும் அணி, அணியாக குற்றாலத்திற்கு அணிவகுப்பதும் வழக்கம். இதனால் குற்றாலத்தில் மட்டும் வியாபாரமும் களை கட்டி காணப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டோ குற்றால சீசன் கடந்த 50 நாட்களாக ஏமாற்றி விட்டது என்றே கூறலாம். ஜூன் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதன் பின்னர் கடந்த ஒரு மாதமாகவே சாரல் இல்லை.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. இதனால் குற்றாலம் களையிழந்து, சீசன் வியாபாரிகளும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்க, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஒரு மாதத்திற்காவது குற்றாலம் சீசன் களைகட்டும் என்பது நிச்சயம். இதனால் குற்றாலப் பிரியர்கள் அருவிக் குளியல் போட இப்போதே தயாராகி டூர் புரோக்ராமை திட்டமிடத் தொடங்கி விட்டனர்.
மளிகைக் கடையில் வேலையை தொடங்கி உயரம் தொட்ட ராஜகோபால்