அத்திவரதர் தரிசன நிகழ்வில் 4 பேர் சாவுக்கு யார் காரணம்? ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

அத்திவரதர் தரிசன பக்தர்கள் 4 பேர் சாவுக்கு அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்தான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்பு அத்திவரதர் பெருவிழா நடந்து வருகிறது. நேற்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து, இலவச தரிசனத்திற்கு 4 வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அத்திவரதர் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்ததாக பகல் ஒரு மணியளவில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதை உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மறுத்தார்.

ஆனால், பிற்பகல் 3 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நடராஜன் (61), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கங்காலட்சுமி (47), சென்னை ஆவடியை சேர்ந்த நாராயணி (55), சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் (50) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்திவரதரை தரிசிக்க நேற்று பல லட்சம் பக்தர்கள் குவிந்ததால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதையடுத்து, வி.ஐ.பி. தரிசனங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அத்திவரதரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும் என்றும், மூலவரை தரிசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாஜக செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 4 பேர் கூட்டநெரிசலில் உயிரிழந்துள்ளது அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டமிடல் இல்லாததே காரணம். உ.பி.யில் 34 கோடி பேர் கும்பமேளாவில் எவ்விதப் பிரச்னையும் இன்றி நீராடினர். இறந்தவர் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி தர வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

'அத்திவரதர் தரிசனத்தில் தடபுடல் மரியாதை' மதுரை ரவுடிக்கு 'ஆல் இன் ஆல்' ஏற்பாடு திமுக புள்ளிகளாம்
More News >>