பிரியங்கா காந்தி திடீர் தர்ணா கைது செய்த உ.பி. போலீஸ்

உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா என்ற ஊரில் நிலப் பிரச்னையில் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்ேபாது துப்பாக்கியால் சுட்டும் சண்டை போட்டனர். இதில் 10 பேர் வரை உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலையில் திடீரென சோன்பத்ராவுக்கு சென்றார். அவர் மிர்சாபூர் அருகே சென்ற போது அவரை போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சேர்ந்து தடுத்தனர். அப்போது அவர், ‘‘யாருடைய உத்தரவின் பேரில் என்னை தடுக்கிறீர்கள்? எந்த சட்டத்தில் என்னை போக விடாமல் தடுக்கிறீர்கள். நான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே செல்கிறேன். எனது மகன் வயதில் ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் கிடப்பதைப் பார்த்தேன். நான் ஏன் அங்கு போகக் கூடாது?’’என்று பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்தார்.

தொடர்ந்து அவர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா செய்தார். அப்போது நாராயண்பூர் போலீசார் அங்கு வந்து அவரை எழுப்பி காரில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி, ‘‘என்னை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் எங்கும் செல்லத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். பிரியங்கா வருகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது உ.பி.யில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடப்பதால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி
More News >>