2 மாதமாக நீடிக்கும் குழப்பம் காங்கிரஸ் தலைவர் பதவியை பிரியங்கா காந்தி ஏற்பாரா?
நாட்டில் 134 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியாத குழப்பம் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில், பிரியங்கா காந்தி இந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசாரிடம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்து விட்டது. இது காங்கிரஸ் தலைவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கடந்த மே மாதம் 25ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலக போகிறார் என அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.
அதன்பிறகு, தேர்தலின் போது மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்பட பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், யாருமே சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். அதே போல், பா.ஜ.க.வை எதிர்த்து தான் தனி ஆளாக நின்று போராட வேண்டியதாயிற்று என்றும் குறிப்பிட்டார். தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் உள்பட பலரும் ராகுலிடம் முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் முதலமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த 2ம் தேதியன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால், ராகுல்காந்தி அசைந்து கொடுக்கவே இல்லை.
இதன்பின், ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’தளத்தில் 4 பக்க கடிதத்தை வெளியிட்டார். அதில் அவர், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த கடுமையான முடிவு எடுக்க வேண்டும். புதிய தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. புதிய தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று ஒதுங்கிக் கொண்டார்.
ராகுல்காந்தி முடிவு அறிவித்து 2 மாதங்கள் முடியப் போகிறது. ஆனால், இன்னமும் கூட காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. காரணம், சோனியா கூட இந்த விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி விட்டார். அதனால், யாரையாவது ஒருவரை சுமுகமாக முடிவு செய்த பின்பு, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டுவோம் என்று யோசித்து வருகின்றனர். தற்காலிகமாக மிக மூத்த தலைவர் ஒருவரை பொறுப்பேற்கச் செய்து விட்டு, சிறிது காலம் கழித்து மீண்டும் ராகுல்காந்தியை அழைக்கலாமா என்று கூட யோசித்தனர்.
இதன்படி, மோதிலால் வோரா, கரன்சிங் போன்ற தலைவர்களை கூட பொறுப்பேற்க வைக்க ஆலோசித்தனர். ஆனால், 90 வயது வோராவை போன்றவர்களை நியமித்தால் இருக்கும் கட்சியும் சுத்தமாக கரைந்து விடும் என்று இளம்தலைவர்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து, மூத்த தலைவர்கள் அகமது படேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதேந்திரசிங், தியோடர்சிங், சச்சின் பைலட் ஆகிய இளம் தலைவர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைக்க முடிவு செய்தனர்.
இதை கேள்விப்பட்டதும் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி, ‘‘யார் இவர்களை நியமித்தது? இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? எப்படி இவர்கள் முடிவெடுக்கலாம்’’ என்று கொந்தளித்திருக்கிறார். இதனால், தலைவரை தேர்வு செய்வதில் இன்னும் குழப்ப நிலையே நீடிக்கிறது.
இந்த சூழலில், தனது கணவர் வத்ரா மீதுள்ள பழைய வழக்குகளை எல்லாம் தூசிதட்டி எடுத்து பாஜக அரசு நெருக்கடி கொடுத்தாலும் ஒதுங்கி விடாமல் பிரியங்கா காந்தி துணிச்சலாக அரசியல் செய்து வருகிறார். எனவே, பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கச் செய்யலாம்.
ஆனால், அவர் அதில் முடிவெடுப்பதற்கு சரியான கால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை ஜோதிராதித்ய சிந்தியா போன்ற ஒரு இளம் தலைவரிடம் கட்சியை ஒப்படைக்கலாம். ஆனால், மூத்த தலைவர்கள் என்ன சிந்திக்கிறார்களோ? எது எப்படியோ, 134 ஆண்டு கால கட்சிக்கு, தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைமை இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்தான்.
'அமேதியில் ராகுல் காந்தி' - தோல்விக்குப் பின் முதன்முறையாக பயணம்