அத்திவரதர் தரிசனம் காண முதியோர்கள் வர வேண்டாம் கலெக்டர் வேண்டுகோள்
அத்திவரதர் தரசனத்திற்கு வராமல் முதியோர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமென்று காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்பு அத்திவரதர் பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனத்துக்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நடராஜன் (61), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கங்காலட்சுமி (47), சென்னை ஆவடியை சேர்ந்த நாராயணி (55), சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் (50) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, வி.ஐ.பி. தரிசனங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அத்திவரதரை மட்டுமே தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், மூலவரை தரிசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 19வது நாளான நேற்று அத்தி வரதர் ராமர் நீலம் பட்டு உடுத்தி, வெட்டிவேர் மாலை அணிந்து ஆண்டாள் கிளி வைத்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனால், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது போல் பல மணிநேரம் காத்திருந்தவர்களால் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடிந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், பல்வேறு அரசு துறைகளும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அத்திவரதரை தரிசிக்க குறைந்தது 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.
எனவே, உடல் தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வை கூடுமானவரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முதியோர்கள்தான் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்திற்கு அதிகமாக வருகிறார்கள். கலெக்டரின் வேண்டுகோளை அவர்கள் ஏற்று வராமல் தவிர்ப்பார்களா என்பது தெரியவில்லை.
அத்திவரதர் தரிசன நிகழ்வில் 4 பேர் சாவுக்கு யார் காரணம்? ஹெச்.ராஜா குற்றச்சாட்டு