இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீத்தாராமன் பேட்டி

தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் ரயில்வே துறையில் அனைத்து தொடர்புகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமென்று ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. அது மீடியாக்களில் வரவும் எதிர்க்கட்சிகள், மீண்டும் இந்தி திணிக்கப்படுவதாக கூறி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. அதன்பிறகு, தபால்துறை பணிக்கான தேர்வில் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் எழுதும் வாய்ப்பு நிறுத்தப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டுமென கூறப்பட்டது. அதன்படி தேர்வும் நடைபெற்றது.

பின்னர், இதற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.இந்நிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:

தமிழகத்தில் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. மாறாக, ஷெரஸ்தா பாரத் திட்டத்தில் நாங்கள் தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாதது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,‘‘சமீபத்தில் நிகழ்ந்தவை அரசு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த தவறுகள். இதை இந்தி திணிப்பாக பார்க்கக் கூடாது’’ என்றார்.

தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது
More News >>