சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்சருல்லா என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்தஇந்த 14 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலைப் படையாக மாற திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் சென்னை, தேனி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் சோதனையை தொடர்ந்தனர். நெல்லை மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் பகுதியில் முகம்மது இப்ராகிம் என்பவரது வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவருடைய குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர்.
இதே போல் தேனி மாவட்டம் கோம்பையில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் வசிக்கும் தவ்பிக் முகம்மது என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவாளர்களை குறிவைத்து தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் அமைப்பினர் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் பல வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீடு; இன்று மாலை சர்வகட்சி கூட்டம்