மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு
மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தில் நடந்து முடிந்து உலக கோப்பை தொடரில், தோனியின் ஆட்டம் பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. உலக கோப்பையை வெல்ல முடியாமல் அரையிறுதியுடன் இந்திய அணி நாடு திரும்பிய நிலையில், தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் ஓய்வு குறித்து தோனி இதுவரை எந்த வார்த்தையும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வரும் தோனி, கேப்டனாக இருந்த போது 50 ஓவர் உலக கோப்பை, டி-20 உலக கோப்பைகளை இந்தியா வெல்ல காரணமாக இருந்தவர். சிறப்பான ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளைப் படைத்த தோனி, சமீப காலமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இனியும் அவர் இந்திய அணியில் நீடிக்க வேண்டுமா? என முன்னாள் வீரர்கள் சேவாக், காம்பீர் போன்றோர் விமர்சித்து வருகின்றனர்.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியமும் தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளது. மூத்த வீரரான தோனியை அணியை விட்டு நீக்கினால், அவரை அவமதித்தது போலாசி விடும். எனவே அவராக தமது ஓய்வு முடிவை அறிவிக்கட்டும் என பிசிசிஐ யோசிக்கிறது.
இந்த நிலையில் மே.இ.தீவுகளில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், பட்டியலில் தோனியின் பெயர் பெறுமா? இல்லையா? என்ற பெரும் விவாதமே நடந்து வருகிறது.
இந்நிலையில் மே.இ.தீவுகள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில்ருந்து தோனி தானாகவே விலகி இருக்கிறார் என்றும், அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட உள்ளார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கும் தோனி, அந்த நிறுவனங்களுடன் பல கோடி ௹பாய்க்கு 2023-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளார். திடீரென ஓய்வு பெற்றால் இந்த ஒப்பந்த விவகாரம் சிக்கலாகி விடும் என்பதாலேயே தோனி ஓய்வு முடிவை தள்ளிப் போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!