வீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி..? உ.பி. கிராமவாசிக்கு ஷாக் கொடுத்த மின் துறை
ஒரே ஒரு பேன், ரெண்டே டியூட் லைட் உள்ள முதிய தம்பதியர் வசிக்கும் கிராமவாசி ஒருவரின் சின்னஞ்சிறு வீட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல... 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் மட்டும் தானாம். இந்தப் பணத்தை சாமான்யன் கட்ட முடியுமா?முடியாததால், மின் இணைப்பை துண்டித்து விட்டமின் துறை அதிகாரிகள், பணத்தை கட்டினால் மட்டுமே மீண்டும் இணைப்பு என்று கூறி அந்த முதிய தம்பதியரை அலைக்கழிக்கின்றனராம். இந்தக் கூத்து உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளது.
உ.பி.மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ் சிறிய கிராமம் சாம்ரி. நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்தில் சமீம் என்ற முதியவர் தமது மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். மின் இணைப்பு உள்ள இவருடைய வீட்டில் ஒரு மின்விசிறியும், 2 டியூப் லைட்டுகள் மட்டுமே பயன்படுத்துகிறாராம். சாதாரணமாக மாதத்திற்கு மின் கட்டணம் 700 ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்தவருக்கு, இம்மாத கட்டணமாக 128 கோடி சொச்சம் ரூபாய்க்கு பில் போட்டுள்ளனர் மின் துறையினர் .
இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டவுடன் ஷாக்காகிப் போன முதியவர், எங்கோ தவறு நடந்துள்ளது என்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகளோ, பில் போட்டால் போட்டது தான். தொகையை கட்டித் தான் ஆக வேண்டும் என கறார் காட்டியுள்ளனர்.128 கோடி ரூபாயை பல தலைமுறையானாலும் சம்பாரிக்க முடியாத முதியவர் எங்கே போவார்? அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து அலுத்துப் போனார். பில்கட்ட கெடு தேதி முடிந்தவுடன், மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
இதனால் அந்த முதியவர் மீண்டும் பதறியடித்து அதிகாரிகளிடம் முறையிட, முதலில் பில் பணத்தை அபராதத்துடன் கட்டுங்கள், அப்பொழுது தான் மீண்டும் மின் இணைப்பு என்று மீண்டும் கறார் காட்டியுள்ளனர். முதியவரும் எங்கெங்கோ முட்டிப் பார்த்தும் தீர்வு கிடைத்த பாடில்லை. கடைசியில் இந்த விவகாரம் மீடியாக்களின் வெளிச்சத்துக்கு வர இப்போது அந்த முதியவருக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டுள்ளது என்று பழியை கம்ப்யூட்டர் மேல் போட்ட உ.பி. மின் அதிகாரிகள், அதனை சரி செய்து விடுவதாக இப்போது உறுதி கொடுத்துள்ளதால் முதியவருக்கு நிம்மதி கிடைத்துள்ளது. உ.பி.யில் இப்படி மின்சாரக் கட்டணம் எக்குத்தப்பாக வருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ23 கோடியை கட்டணமாக தீட்டியிருந்த விவகாரம் அப்போது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.