கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள் காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜுன் மாத துவக்கத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை ஏமாற்றி வந்தது. மழையின்றி அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் இந்த ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை. அணையின் நீர் மட்டமும் படுபாதாளத்துக்குச் சென்றது

இந்நிலையில், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் 3, 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதேபோல் , கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகளிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் அடுத்த சில தினங்களில் உயர ஆரம்பிக்கும் என்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

More News >>