இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார் டி.ராஜா எம்.பி

இந்திய கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலையை காரணம் காட்டி சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜா தமிழகத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள டி.ராஜா, மாணவ பருவம் முதலே கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பு வகித்தவர். கட்சியின் ஒரு அங்கமான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில செயலாளராக பதவி வகித்த இவர்,பின்னர் அம்மன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வரும் டி.ராஜா தற்போது கட்சியின் உயர்ந்த பதவியான பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி.ராஜாவின் மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். இவர் இந்திய கம்ழனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள டி.ராஜாவின் பதவிக்காலம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>