ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பி.எஸ். ஆஜராக தயங்குவது ஏன்? ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், அது தொடர்பான விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.ம.மு.க.வில் இருந்து தங்கத்தமிழ்ச் செல்வன் விலகி, திமுகவில் இணைந்த போது தனது ஆதரவாளர்கள் திமுகவில் சேரும் நிகழ்ச்சி தேனியில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தங்கத்தமிழ்செல்வன் ஆதரவாளர்கள், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் நீங்கள் வந்து சேர்ந்துள்ளீர்கள். தங்கத்தமிழ் செல்வனை தூண்டில்போட்டு இழுத்து விடலாம் என்று நாங்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்தோம். அப்போது அவர் மாட்டவில்லை.

ஆனால், இப்போது மாட்டி விட்டார். ஜெயலலிதா மறைவில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. இதற்காக ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை கமிஷனில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. அதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்த போது தர்மயுத்தம் எல்லாம் நடத்தியவர் அவர். இப்போது அவர் விசாரணை கமிஷனுக்கு வராமல் இருப்பது ஏன்?

வெறும் பதவிக்காக, பணத்துக்காக தலையாட்டி பொம்மையாக அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வில் உழைத்து கொண்டிருக்கும் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அங்கே இருப்பது நியாயமல்ல. உங்களின் இயக்கம் தாய்க்கழகமான தி.மு.க.தான். நான் அவர்களையும் அழைக்க விரும்புகிறேன்.நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டது என்று எடப்பாடி கூறுகிறார்.

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் ஒரு தொகுதியில் (தேனி) வெற்றி பெற்று இருக்கிறீர்களே. நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? மக்களை எதுவுமே தெரியாதவர்கள் என்று கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசலாமா? தி.மு.க. முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். நாங்கள் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வர மத்தியில் முடிவு எடுத்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியே அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, நீட் தேர்வை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வுக்கு தடை உத்தரவு பெற்றார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை கூட வரவில்லை. நான் அவரை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தவர் அவர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை தடுப்போம் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தடுக்கவில்லையே?இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு தடையை நீட்டித்தது சுப்ரீம்கோர்ட்

More News >>