விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான்-2- இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரவாரம்
நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக உலக நாடுகளில் முதல் நாடாக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சியில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் துருவப் பகுதியை இதுவரை ஆராய்ந்தது இல்லை. அந்தச் சாதனையை முதன்முதலாக இந்தியா படைக்க உள்ளது. இதற்காக ரூ.1000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சந்திரயான்-2’ விண்கலம், இஸ்ரோ விஞ்ஞானிகளின் அரிய முயற்சியால் உருவாக்கப்பட்டது.
கடந்த 15-ந் தேதி அதிகாலை இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கவுண்ட்டவுனும் நடந்து வந்தது. இந்தச் சாதனை நிகழ்வை நேரில் காண குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஸ்ரீஹரிகோட்டாவில் கண் விழித்து காத்திருந்தனர். ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு கடைசி நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறை, இஸ்ரோ விஞ்ஞானிகள் சரி செய்து நிலையில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்துடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு கவுண்ட் டவுன் நேற்று மாலை 6.23 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் - 2 விண்கலத்தை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதனால் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் மேலும் ஒரு அரிய சாதனை நிகழ்த்திய மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தனர்.
சுமார் 3.84 லட்சம் கி.மீ. பயணம் செய்யும் சந்திராயன்-2 விண்கலம் ஒரே மூச்சில் தனது பயணத்தை முடித்து விடாது என்று கூறப்படுகிறது.
சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும்.
ஏனெனில் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றிச் சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.
நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு ; மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது?