தாஜ்மஹாலுக்கு ரூ.50 உள்ளே கல்லறைக்கு ரூ.200.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி

ஆக்ரா: காதல் சின்னமான தாஜ் மஹாலை சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணம் மட்டும் வசூலித்து வந்த நிலையில், உள்ளே சென்று மும்தாஜ் கல்லரையை பார்க்கவும் வரும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.200 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாக விளங்கி வரும் தாஜ்மஹாலை காண தினமும் நூற்றுக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். மொகலாயர் காலத்து கட்டுமானங்களுடன், பிரமிக்க வைக்கும் அழகை காண உள்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு 3 மணி நேரத்திற்கு ரூ.40 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல், வெளிநாட்டவர்களுக்கு என தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இதுவரையில் உள்ளே சென்று மும்தாஜ் கல்லரையை காண பார்வையாளர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்நிலையில், இதில் திருத்தம் செய்யப்பட்டு தற்போது கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாஜ்மஹாலை சுற்றப்பார்க்க மூன்று மணி நேரத்திற்கு ரூ.50ம், உள்ளே சென்று மும்தாஜ் கல்லரையை பார்க்க கூடுதலாக ரூ.200 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு ஏற்கனவே அதிக தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவதால் இந்த புதிய கட்டணம் அவர்களுக்கு பொருந்தாது எனவும், இந்த புதிய கட்டணத் தொகை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

More News >>