ஆடி ஸ்பெஷல் சுட்ட தேங்காய் இனிப்பு ரெசிபி

ஆடி மாதத்தில் சிறப்பாக செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்று சுட்ட தேங்காய் இனிப்பு. இதை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒன்று

நாட்டு சர்க்கரை - ஒரு கப்

பாசிப் பருப்பு - ஒரு தம்ளர்

பொட்டுக் கடலை - ஒரு தம்ளர்

எள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் தேங்காயின் வெளியே உள்ள நார்களை நன்றாக தேய்த்து முழுமையாக எடுத்துவிடவும்.

பிறகு, தேங்காயின் உச்சியில் ஓட்டைப்போட்டு தண்ணீரை வெளியே எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து பாசிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். இதேபோல், எள் வறுத்து சேர்க்கவும்.

அத்துடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்த பின்னர் வெல்லம் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை தேங்காயின் ஓட்டை வழியாக, தேங்காய் தண்ணீருடன் முழுமையாக புகுத்தி நிரப்பவும்.

பின்னர், மஞ்சள் தூளை தண்ணீர்விட்டு கலந்து தேங்காயின் மீது மற்றும் சிறிய மூங்கில் கொம்பில் பூசவும்.

இந்த மூங்கில் கொம்பை தேங்காயின் ஓட்டையில் சொருகி நெருப்பில்விட்டு முழுமையாக சுடவும்.

தேங்காய் ஓடு உடைந்தப் பிறகு, எடுத்து ஆறவிடவும். உள்ளே இருக்கும் கலவை தேங்காயுடன் வெந்து சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

தேங்காய் துண்டுடன் கலவையையும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்..!

More News >>