குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது- அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆஜராக மறுப்பு

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் எம்எல்ஏக்கள் 15 பேர், பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் சபாநாயகரோ ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்து விட்டார். இதனால் கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. குமாரசாமி அரசும் ஊசலாட்டத்தில் உள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கடந்த வியாழக்கிழமை, முதல்வர் குமாரசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுத்தால் பணிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார் குமாரசாமி .ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களோ, தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

இதனால் கடைசி ஆயுதமாக 15 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி ரு கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் தம் முன் இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதனால் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று பெங்களூரு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களோ, தாங்கள் இன்று ஆஜராக முடியாது. ஆஜராக 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தங்களை தகுதி நீக்கம் செய்வதென்றால், பதிலளிக்க ஒரு வாரம் கெடு விதிக்க வேண்டும். அதை விடுத்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நாங்களும் எங்கள் வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை பெற வேண்டியுள்ளது. எனவே 4 வாரம் அவகாசம் வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது 3 நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்தது. அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகர் முன் ஆஜராக வரும் போது எப்படியாவது அவர்களை சமாதானம் செய்து விடலாம் என்பது காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களோ சட்ட விதிகளைக் காட்டி இன்று ஆஜராகாமல் தப்பித்து விட்டனர்.

இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது. இன்று கட்டாயம் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குமாரசாமி அரசும் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுவிட்டது என்றே கூறலாம்.

குமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது; வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

More News >>