ஆர்டிஐ சட்டம் ஒரு தொல்லையா? மத்திய அரசுக்கு சோனியா கண்டனம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான திருத்தச் சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஆர்டிஐ சட்டத்தை ஒரு இடையூறாக மத்திய அரசு பார்க்கிறது.

அதனால், அந்த சட்டத்தின் அதிகாரத்தை பறித்து அதன் சுதந்திரத்தை அழிக்க முயற்சித்துள்ளது. மக்களுக்கு தகவல் அறியும் உரிமை அளிக்கும் இந்த சட்டம், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சட்டத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஏழை மக்கள் தங்கள் உரிமைகளை இந்த சட்டத்தின் மூலம் கேட்டு பெற்றிருக்கிறார்கள். இந்த சூழலில், சட்டத்தை அதிகாரமற்றதாக வளைக்க முயற்சிப்பது, நாடாளுமன்றத்தில் நடந்து விடலாம். ஆனால், நாட்டு மக்களின் அதிகாரத்தையும், உரிமைகளையும் இது பறிப்பதாகும்.

இவ்வாறு சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தத்தின்படி, மத்திய தகவல் ஆணையர் பதவிக்கான வரம்புகள், ஊதியம், பணிக்காலம் என்று எல்லாவற்றையும் மத்திய அரசே தீர்மானிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய தகவல் ஆணையம் என்பது விஜிலென்ஸ் கமிஷன் போல் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகி விடும்.

கோவாவில் நடந்தது அரசியல் விபச்சாரம்: காங்கிரஸ் காட்டம்
More News >>