கர்நாடக சட்டசபைக்கு வராத முதல்வர் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் கோபம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.ஆளும் கட்சி தரப்பில் இருக்கைகள் காலியாக கிடப்பதைப் பார்த்த சபாநாயகர் கோபமடைந்து எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக அரசியல் நெருக்கடிக்கு இன்று மாலை முடிவு எட்டப்படும் என்பது உறுதியாகிவிட்டது. ஆட்சியைக் காப்பாற்ற முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிந்து விட்டன. நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து விட்டு, வாக்கெடுப்பு நடத்துவதை 3 நாட்களாக, ஏதேதோ சாக்கு போக்கு கூறியும், நாடகம் நடத்தியும் காலம் தாழ்த்தி விட்டது குமாரசாமி தரப்பு.

மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை பெங்களூரு வரவழைத்து, சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணமும் கைகூடாமல் போய்விட்டது. இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் அனுப்பிய சம்மனுக்கும், ஆஜராகாமல் பதில் கடிதம் அனுப்பி விட்டு தப்பித்துக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முழு ஒத்துதைப்பு தருவதாக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா, அமைச்சர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் குழுத்தலைவர் சித்தராமய்யா ஆகியோர் உறுதி அளித்தனர். இதனாலேயே நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு சட்டப் பேரவையை ஒத்தி வைக்க சபாநாயகர் சம்மதித்தார்.

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூடிய போது, பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆஜராகி விட்டனர். ஆனால் ஆளும் கட்சித் தரப்பில் அமைச்சர் பிரியங்க் கார்கேவும் ஒரு சில எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேச வேண்டிய முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா, காங்கிரஸ் கட்சியின் சித்தராமய்யா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும், எம்எல்ஏக்கள் பெரும்பாலானோரும் சட்டசபைக்கு வரவில்லை.

இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ட சபாநாயகர் ரமேஷ்குமார் கோபமடைந்தார். அமைச்சர் பிரியங்க் பார்த்து, இது இந்த சட்டசபையின் தலைவிதியா?என்னுடைய தலை விதியா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஒட்டு மொத்த மதிப்பையும் இழந்து விட்டீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தார்.

பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோரும், முதல்வரின் செயல் வெட்கக்கேடானது. அவர் நடத்தும் நாடகங்களை ஒட்டுமொத்த கன்னட மக்களும் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று சாடினர். பாஜகவின் ஜெகதீர் ஷட்டர் கூறுகையில், முதல்வர் குமாரசாமி பதவி பறிபோகும் நேரத்தில், அவசர அவசர முக்கிய பைல்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகணும்; கர்நாடக சபாநாயகரின் அடுத்த அதிரடி

More News >>