இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் ஆளும்கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார். தற்போதைய பிரதமர் தெரசா மே, நாளை(ஜூலை24) பதவி விலகுகிறார்.

இங்கிலாந்தில் ஆளும் கட்சியின் தலைவரே நாட்டின் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தெரசா மே இருக்கிறார். இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், பொருளாதார வலிமையை இழந்து விட்டதாக பேசப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக, நடந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து அந்நாடு விலகுவதற்கு ஆதரவாக வாக்குகள் விழுந்தன. இதனைத் தொடர்ந்து, அதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் போடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு ஷரத்துக்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் ஏற்பட்டதால், கடைசி வரை அதை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே தான் பதவி விலகுவதாக அறிவத்தார். புதிய பிரதமர் பதவிக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன், மைக்கேல் கோ, ஆண்ட்ரியா, ஜெர்மிஹன்ட், ஸ்டீவர்ட் , மட்ஹான்காக், எஸ்தர்மேக் வே ஆகியோர் போட்டியிட்டனர். இதில், ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹன்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களில் 92 ஆயிரத்து 152 பேரின் வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். போரிஸ் 66 சதவீத ஓட்டுகளும், ஹன்ட் 34 சதவீத ஓட்டுகளும் பெற்றனர்.

இதையடுத்து, தெரசா மே நாளை நாடாளுமன்றத்தில் விடை பெற்று பதவி விலகுவார். தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் பிரதமராக பொறுப்பேற்பார். பின், பிரதமருக்கான டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு மாறுவார்.

More News >>