முடிவுக்கு வந்தது கர்நாடகா நாடகம் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கடந்த 17 நாட்களாக கர்நாடகாவில் நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்தாண்டு மே மாதம் பதவியேற்றது. 14 மாத கால ஆட்சியில் பல முறை ஆட்சிக்கு நெருக்கடி வந்தாலும் தப்பிப் பிழைத்து வந்தது. கடந்த 6-ந் தேதி ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அதிருப்தியாளர்களாக மாறி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் அரசுக்கு நெருக்கடி முற்றியது. இதனால் 119 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழக்கும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 12-ந் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய போது, மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதனால் கடந்த 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் குமாரசாமி. ஆட்சியை தக்க வைக்க அதிருப்தியாளர்களை சமாதானம் செய்து விடலாம் என்ற நினைப்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை கடந்த வியாழன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமை ஆகிய 3 நாட்களாக, தீர்மானத்தின் மீது விவாதம் என்ற பெயரில் தாமதம் செய்தார் முதல்வர் குமாரசாமி.

அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தும் கடைசி வரை அவர்கள் மசியவில்லை. இன்று சபாநாயகர் முன் ஆஜராக சம்மன், அனுப்பியும், மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்து விட்டு தப்பித்துக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தே தீரும் என சபாநாயகர் கறாராக இறுதிக் கெடு விதித்த நிலையில், வேறு வழியின்றி முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். உருக்கமான அவரது உரையில் தமது 14 மாத ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார் குமாரசாமி . அரசியலுக்கு தாம் விருப்பப்ட்டு வரவில்லை என்றும், தமக்கு பதவி ஆசை இல்லை என்றும், முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும் மகிழ்ச்சி தான் என்று கூறி வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறினார்.

இதையடுத்து சட்டப் பேரவையின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.மொத்தம்ள்ள 224 எம்எல்ஏக்களில் 204 பேர் சட்டப்பேரவையில் அப்போது இருந்தனர். இதில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்த்து 105 பேரும் வாக்களிக்க, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த குமாரசாமி, தமது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதனால் கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என்றும், எடியூரப்பா மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.

More News >>