72 ஆண்டுகளில் 32 முதல்வர்களை கண்ட கர்நாடகா - 5 ஆண்டு நீடித்தது 4 பேர் எடியூரப்பா கதை பெரும் சோகம்
கர்நாடக மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 72 ஆண்டுகளில் 32 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்துள்ளனர். தற்போது 4-வது முறையாக முதல்வராகப் போகும் பாஜகவின் எடியூரப்பாவின் கதை தான் மிகவும் சோகமானது. முதல் முறை முதல்வராக 7 நாட்களும், அடுத்த முறை 3 ஆண்டுகளும், கடைசியாக 2 1/2 நாட்களும் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக முதல்வர்களைக் கண்ட மாநிலம் என்றால் கர்நாடகாவாகத்தான் இருக்கும். பதவிச் சண்டையால் அடிக்கடி முதல்வர்கள் மாற்றம் நடைபெறுவது அங்கு சகஜமாகி விட்டது. கடந்த 72 வருடங்களில் 15 முறை சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளதில் தற்போது குமாரசாமியை கவிழ்த்து விட்டு மீண்டும் முதல்வராக உள்ள எடியூரப்பாவையும் சேர்த்தால் மொத்தம் 32 முதல்வர்களைக் கண்டுள்ளது கர்நாடக மாநிலம் .
இதில் 1947 அக்டோபரில் முதல்முறையாக கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற காங்கிரசின் செங்கலராய ரெட்டி என்பவர் 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். அதன் பின் 1952ல் நடந்த அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கெங்கல் ஹனுமந்தையா என்பவர் 4 ஆண்டுகளில் பதவி பறிக்கப்பட்டு, அடுத்த ஒரு வருடத்துக்கு மஞ்சப்பா, நிஜலிங்கப்பா என 2 பேர் அடுத்தடுத்து முதல்வர்களாக பதவி வகித்தனர். கர்நாடகத்தில் அடிக்கடி முதல்வர்களை மாற்றும் கலாச்சாரத்துக்கு வித்திட்டதே காங்கிரஸ் தான்.
1957-62 தேர்தலிலும் நிஜலிங்கப்பா, பி.டி.ஜாட்டி என 2 முதல்வர்கள் பதவி வகித்தனர். 1962-67 காலத்தில் நிஜலிங்கப்பா 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். ஆனால் 1967 முதல் 1999 வரையிலான காலத்தில் மட்டும் 15 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து 4 முறை ஜனாதிபதி ஆட்சியும் நடந்த வரலாறும் உண்டு.
1999 முதல் 2004 வரை காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணாவும், 2013 முதல் 2018 வரை சித்தராமய்யாவும் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். ஆனால் 2004 முதல் 2008 வரையிலான காலக்கட்டத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஏகப்பட்ட முதலில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியது. காங்கிரசின் தரம்சிங் 2 ஆண்டுகளும், அடுத்து மஜதவின் குமாரசாமி ஒன்றரை ஆண்டுகள் முதல்வராக இருந்த போது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு பதவி இழந்தார் குமாரசாமி .
ஒரு மாதம் ஜனாதிபதி ஆட்சி இருந்த நிலையில் திடீரென பாஜகவுடன் குமாரசாமி கைகோர்க்க, எடியூப்பா முதல்வரானார். ஆனால் இந்தக் கூட்டணி ஒரு வாரம் தான் தாக்குப் பிடித்தது. 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி இழந்து மீண்டும் ஜனாதிபதி ஆட்சி வந்தது.
2008-ல் நடந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும் மெஜாரிட்டி பெற, எடியூரப்பா மீண்டும் முதல் வரானார். இந்த முறை 3 ஆண்டுகள் முதல்வராக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு சிவானந்த கவுடா, ஜெகதிஷ் ஷட்டர் ஆகியோர் ஆளுக்கு ஒரு வருடம் முதல்வர் பதவியில் அமர்ந்தனர்.
2018 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டது. கூடுதல் இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் . எடியூரப்பா 3 -வது முறையாக கர்நாடக முதல்வரானார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் வழங்கினார் ஆளுநர். எப்போது திடீரென கூட்டு வைத்த காங்கிரசும், மஜதவும் எடியூரப்பாவுக்கு வேட்டு வைக்க இரண்டரை நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின் குமாரசாமி, மஜத - காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வராக்கப்பட 14 மாதங்களில் பதவியை இழந்துள்ளார். மீண்டும் எடியூரப்பா அமைக்க உள்ளார் என்ற நிலையில், பதவி அதிகாரத்திற்காக அடிக்கடி அடிதடி சண்டை போடும் கர்நாடக அரசியல்வாதிகள் மத்தியில் எடியூரப்பா எவ்வளவு காலத்துக்கு நீடிப்பார் என்பதே இப்போது பரபரப்பான பேச்சாசிக் கிடக்கிறது.